`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்! | Sabarimala issue- Supreme Court said all men and women have equal right to worship

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:08:40 (19/07/2018)

`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்ச நீதிமன்றம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்காதது குறித்த வழக்கில், ’வழிபாட்டில் ஆணுக்கு இணையாகப் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்துக்குள் பெண்களையும் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று (18.07.2018), உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ரோஹிந்தன் நரிமான், கான்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய ஐந்து நபர் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையில், `ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வழிபடுவதற்குச் சமஉரிமை உள்ளது’ என்று  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சபரிமலை

மேலும்,``குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களும், குறிப்பிட்ட வயதுக்குக் குறைந்தவர்களும் தூய்மையற்றவர்களாகக் கருதி விலக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒருவரின் வயதைக் காரணம் காட்டி, வழிபடுபவர்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது. மேலும், மாதவிலக்கை மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை பகுத்தறிவோடு பார்க்க வேண்டும்” என்று  சுட்டிக்காட்டியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, ``சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று வாதிட்டுள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளில், இடதுசாரி முன்னணி தலைமையிலான ஆட்சியில், சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதியில், பெண்களை அனுமதிக்கலாம் என்று வாதிடுவதும், அதன்பின்பு ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில், சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் பெண்களுக்கான தடை சரியே என்று வாதிடுவதும் மாறிமாறி  விசாரணையின்போது தெரிவிப்பதுமாக இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை, வியாழக்கிழமை நடைபெற உள்ளது.