வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (19/07/2018)

கடைசி தொடர்பு:09:40 (19/07/2018)

'எங்களிடம் உறுப்பினர்கள் இல்லை என யார் சொன்னது?' - சோனியா அதிரடிப் பேச்சு

'எங்களிடம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?' என நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான கேள்விக்கு சோனியா காந்தி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சோனியா

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆனால் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, அ.தி.மு.க போன்ற கட்சிகள் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவந்ததால், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர்  சுமித்ரா மகாஜன்  ஏற்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட்  10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, கூட்டத்தின் முதல் நாளான நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதை ஏற்ற சுமித்ரா மகாஜன், வரும் 20-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்தார்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. ``அப்போது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவில், உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. உங்கள் கட்சிக்குப் போதுமான உறுப்பினர்கள் இல்லை எனக் கூறுகிறார்களே எனக் கேள்வி எழுப்பப்பட்டது, உடனடியாக “எங்களிடம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லை என யார் சொன்னது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார் சோனியா. தொடர்ந்து பேசிய அவர்,  “இந்த நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் வலிமையும், கருத்து வேற்றுமைகளும் தெரிய வாய்ப்புள்ளது. அதேசமயம் மத்திய அரசுமீது எதிர்க்கட்சிகள் சொல்லும் புகாருக்கு அவர்கள் அளிக்கும் பதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதும் பலன்தரும்” எனக் கூறினார்.