`ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலி' - மத்திய அமைச்சர் தகவல்!

ரயில் மோதி கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பலியாகியுள்ளனர் என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடங்கிய முதல்நாளே பரபரப்பு அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம், கடந்த கூட்டத் தொடரில் ஏற்க முடியாமல்போன எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, இந்தக் கூட்டத்தொடரில் நிகழ உள்ளது. ஆம், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம், மோடி அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகளில், முதல் முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சந்திக்க உள்ளது. இதற்கிடையே, நேற்றைய கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது, ரயில்வே குறித்த கேள்விக்கு, ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகைன், ``கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 49,790 உயிரிழப்புகள் 2015 - 2017-ம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளன. 

வடக்கு ரயில்வேயில் 7,908 மரணங்களும், தெற்கு ரயில்வேயில் 6149 இறப்புகளும், கிழக்கு ரயில்வேயில் 5670 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகள் தற்செயலானவை. பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை வழிமுறைகளை மீறுவது, பாலங்கள்மீது தடை மீறி ஏறுவது, மொபைல் போன்களைப் பயன்படுத்திக்கொண்டே செல்வது போன்ற கவனக் குறைவால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு சார்பில் போதிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, விதிகளை மீறுபவர்கள்மீது தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு மட்டும், விதிகளை மீறிய 1,73,112 பேர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!