வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (19/07/2018)

கடைசி தொடர்பு:10:33 (19/07/2018)

குமாரசாமியின் ஒருநாள் வருகைக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்!

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமியின் வருகையையொட்டி சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

மரங்கள்

photo credit : DeccanHerald

கர்நாடக மாநிலத்தில், கடந்த சில நாள்களாகப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதியின் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அணைகள் நிரம்பிவழிகின்றன. தீவிரமான மழையால் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே, ஒரு நாள் பயணமாக குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை முதலமைச்சர் குமாரசாமி இன்று பார்வையிடுகிறார். இதற்காக மடிகிரி, தலகாவேரி உள்ளிட்ட இடங்களில் அவர் செல்லும் பாதைகளில், குறுக்கே உள்ள சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முதல்வரின் பாதுகாப்புக்கு `அபாயகரமான மரங்கள் இவை' எனக்கூறி, இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை முதல் சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. முறையான ஆய்வு செய்யப்படாமல், சாலை நெடுகிலும் உள்ள மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. 

இதற்குப் பதிலளித்துள்ள வனத்துறை அதிகாரிகள், `` நாங்கள் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. மரங்களை வெட்டுவதுகுறித்து நாங்கள் கலந்தாலோசிக்கவில்லை. பலத்த காற்று காரணமாக சாய்ந்த மரங்கள் என அனைத்து மரங்களையும் அதிகாரிகள் வெட்டித் தள்ளியுள்ளனர். மடிகிரி, இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே, இதன் பசுமைக்கு நிறைய சேதங்கள் விளைந்துள்ளன" என்று கூறியுள்ளனர். 

இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், ``எங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல கோரிக்கைகளை விடுத்தோம். ஆனால், அவை யாவும் கண்டுகொள்ளப்படவில்லை. சில மணிநேர சந்திப்புக்காக வரும் முதல்வரின் பாதுகாப்புக்காக, நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டாலும், அவசர அவசரமாக கண்ணில் பட்ட மரங்களை எல்லாம் வெட்டியுள்ளனர்" என்று கூறினர்.   

ஏற்கெனவே, ரூ.1 லட்சத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு ஐபோன் வாங்கிக்கொடுத்த சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது இந்த விவகாரம் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க