வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (19/07/2018)

கடைசி தொடர்பு:10:59 (19/07/2018)

``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்!" - காரணங்களும் சில நியாயங்களும்

புல்லட் ரயில் திட்டத்தினை தற்போது தமிழகத்தில் நடந்துவரும் பசுமைவழிச் சாலைத் திட்டத்துடன் ஒப்பிட்டால் நமது அரசு எவ்வளவு வேகமாகத் திட்டத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்தி வருகிறது என்பதை அறியலாம்.

``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்!

சாலைகள் எப்போதும் வளர்ச்சியின் குறியீடாகவே பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் சாலைகளும் மற்ற போக்குவரத்து வசதிகளுமே அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்கு வகிக்கின்றன. வளர்ச்சியின் அளவை மதிப்பிடவும் அவையே பயன்படுகின்றன. ஆனால் வளர்ச்சி மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யும் வளர்ச்சியாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியானது. அதுதான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் போக்குவரத்து. சாதாரண ரயிலிலிருந்து மெட்ரோ ரயில் வரை முன்னேறியிருந்த நமக்கு புல்லட் ரயில் அறிவிப்பு வியப்பானதாகவும் பெருமையாகவும் இருந்திருக்கலாம். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் புல்லட் ரயில் வசதிகள் இருக்கின்றன. நமது நாடும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேருவதற்கான படிதான் புல்லட் ரயில்கள் எனப் பார்வையும் முன்வைக்கப்பட்டது. புல்லட் ரயில் அமைப்பதற்கான வேலைகளெல்லாம் முடிந்து 2022ல் செயல்பாட்டிற்கு வரும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அது நடக்குமா என்ற கேள்விதான் எழுந்துள்ளது. காரணம் இத்திட்டத்திற்காக அளித்துவந்த நிதியை மக்களின் போராட்டத்தால் ஜப்பான் தற்போது நிறுத்தியுள்ளது. 

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் மகாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி. தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited ) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. திட்டத்திற்கான மொத்த தொகையில் 88,000 கோடி ரூபாயை ஜப்பான் தருகிறது. மீதமுள்ள 22,000 கோடி ரூபாய் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளால் தரப்படும். ஜப்பான் கொடுக்கக் கூடிய 88,000 கோடி ரூபாயும் குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் கொடுக்கும் நிதியும் தவணை முறையில்தான் அளிக்கப்படும். ஜப்பானின் சார்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்தான் (Japan International Cooperation Agency (JICA)) அந்த நிதியைத் தேசிய அதிவேக ரயில் கழகத்துக்கு ஒதுக்குகிறது. அந்த 88,000 கோடி ரூபாயைக் கூட 15 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதுமானதாம். அதுவும் 0.1 சதவீத வட்டி விகிதத்துடன். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இத்திட்டத்தின் தொடக்க விழாவுக்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே (Shinzo Abe) இந்தியா வந்தபோது முதல் தவணையாக 125 கோடி வழங்கப்பட்டது. தொடர்ந்து தவணையாக திட்டத்திற்கான நிதி வந்த நிலையில் சமீபத்திய நிதி வரவில்லை. JICA நிறுவனம் நிதியை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தொடர்ச்சியான மக்களின் போராட்டத்தினால் திட்டத்தைச் செயல்படுத்த முடியாததே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதுதவிர்த்து இந்தத் திட்டத்தில் பல்வேறு தடைகளும் இருக்கின்றன.

 புல்லட் ரயில்  

PHOTO : AFP

508 கிமீ தூரத்துக்குப் போடப்படும் இந்த புல்லட் ரயில் வரவால் 10 மணி நேரப் பயணம் மூன்று மணி நேரமாகக் குறையும் என்கின்றனர். அகமதாபாத்திலிருந்து மும்பை வரை மொத்தம் 12 நிறுத்தங்கள் உருவாக்கப்படவுள்ளன. புல்லட் ரயில் 10 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் 750 பேர் வரை பயணம் செய்யலாம். புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின் சில ஆண்டுகளில் பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டு 1250 பேர் வரை பயணம் செய்யும் வகையில் மாறும் என்றும் கூறுகின்றனர். ஆரம்பத்தில் 35 புல்லட் ரயில்களின் மூலம் ஒருநாளைக்கு 70 பயணங்களும் 2050 க்குள் இதன் எண்ணிக்கை இன்னும் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இத்திட்டம் பற்றி, ``புல்லட் ரயிலின் கட்டணம் மக்களுக்கு ஏற்ற வகையில்தான் இருக்கும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆண்டுக்கு 1.6 கோடி பேர் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார். இதனால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறியுள்ளார். 

இவை அனைத்தையும் கேட்கும்போது வளர்ச்சிக்கான பிரகாசமான அறிகுறிகள் தெரியத்தான் செய்கிறது. ஆனால், இந்த மொத்த திட்டமும் எத்தனை மக்களை வீடற்றவர்களாக, நிலமற்றவர்களாக, வாழ்வை இழந்தவர்களாக மாற்றப் போகிறது என்பது குறித்து வாய் திறக்கவில்லை. மக்கள் தொடர்ச்சியாகப் போராடிய பின்னர்தான் இதற்கான இழப்பீடுகள் குறித்து அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்துக்காக குஜராத்தில் 350 ஹெக்டர் நிலமும் மகாராஷ்டிராவில் 1100 ஹெக்டேர் நிலமும் மொத்தமாக 1400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை விவசாய நிலங்கள். அதனாலாயே இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குஜராத்தில் 196 கிராமங்களும் மகாராஷ்டிராவில் 104 கிராமங்களும் இதில் பாதிக்கப்படுகின்றன. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மட்டும் 2500 குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும். இதுவரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் முறையாக அவர்களைச் சென்றடையவில்லை. அங்கும் போராட்டம் நடந்து வருகிறது. குஜராத்தின் மற்றோரு மாவட்டமான வல்சாட் (Valsad) விவசாயிகள் தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த ஜுன் 22 முதல் 23 வரை குஜராத்தில் பாதிக்கப்படக்கூடிய அனைத்துக் கிராமங்களுக்கும் பேரணி சென்று எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் விவசாயிகள். 

 புல்லட் ரயில்

இத்திட்டத்துக்கான மொத்த நிலத்தையும் கையகப்படுத்த நவம்பர் 2018 வரைதான் காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளனர். இதற்காக, நிலத்திற்கான இழப்பீட்டை 25% அதிகப்படுத்தித் தருவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை திட்டத்துக்குத் தேவையான நிலத்தில் 0.9% வரை மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited ) தெரிவித்துள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்கான வேலைகள் குறைந்த அளவே நடந்துள்ளதால் நிதியை நிறுத்தியுள்ளது ஜப்பான். இதைத் தற்போது தமிழகத்தில் நடந்துவரும் 8வழிச் சாலைத் திட்டத்துடன் ஒப்பிட்டால் நமது அரசு எவ்வளவு வேகமாகத் திட்டத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்தி வருகிறது என்பதை அறியலாம். இத்தனைக்கும் குஜராத், மகாராஷ்டிரா இரு மாநிலங்களிலுமே மத்தியில் ஆளும் பாஜக தான் ஆளுங்கட்சி. ஆனால், அங்கு நிலம் கையகப்படுத்துதலை இவ்வளவு அடாவடியாகச் செய்யவில்லை. வழக்கம்போல மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி திட்டமானது இடம் மாற்றப்படலாம். ஸ்டெர்லைட் ஆலையும் முதன்முதலில் குஜராத்தில் அமைவதாகத்தான் இருந்தது என்பதை இந்த இடத்தில் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், சொந்த மக்களையே நிர்க்கதியாக்கும் அரசாகத்தான் நமது தமிழக அரசு இருக்கிறது. எட்டு வழிச்சாலைகள் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நாட்டுக்குத் தேவை எனச் சொன்னவர்கள் புல்லட் ரயில் சேவையையும் ஆதரிக்க வேண்டும். அப்போதுதானே நாம் சீக்கிரம் வல்லரசாக மாற முடியும். ஆனால், பெரும்பான்மையான மக்கள் வாழ்விழந்து கிடப்பார்கள். அது வேறு விஷயம்.