வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (19/07/2018)

கடைசி தொடர்பு:14:49 (19/07/2018)

`சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு திட்டவட்டம்!

'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' என உச்ச நீதிமன்றத்தில் கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலை

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. மேலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமூலம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் படி நேற்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ரோஹிந்தன் நரிமான், கான்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய ஐந்து நபர் நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. விசாரணையில், `ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் வழிபடுவதற்குச் சமஉரிமை உள்ளது. குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களும், குறிப்பிட்ட வயதுக்குக் குறைந்தவர்களும் தூய்மையற்றவர்களாகக் கருதி விலக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒருவரின் வயதைக் காரணம் காட்டி, வழிபடுபவர்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது. மேலும், மாதவிலக்கை மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை பகுத்தறிவோடு பார்க்க வேண்டும்” என்று  நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்றும் விசாரிக்கப்பட்டது. அப்போது, கேரள தேவசம் போர்டு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், ``சபரிமலையில் 10 முதல் 55 வயதுள்ள பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காலத்தில் 10 முதல் 55 வயதுள்ள பெண்களை அனுமதித்தால், கோயிலின் புனிதம் பாதிக்கப்படும். சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 48 நாள்கள் பெண்கள் விரதமிருக்க முடியாது என்பது போன்ற காரணங்களால் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என நீதிமன்றத்தில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க