டெல்லி உயர் நீதிமன்றத்தில் 9 மாத குழந்தை தாக்கல் செய்த பொதுநல வழக்கு! | 9 month old’s Infant plea in High Court Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (19/07/2018)

கடைசி தொடர்பு:17:45 (19/07/2018)

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 9 மாத குழந்தை தாக்கல் செய்த பொதுநல வழக்கு!

குழந்தைகளுக்குப் பொது வெளியில் பாலூட்ட தாய்மார்கள் சிரமப்படுவதாக 9 மாத குழந்தை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியைச் சேர்ந்த 9 மாத குழந்தை அவ்யான் ராஸ்டோகி (Avyaan Rastogi), தன் தாய் நேஹா ரஸ்டோகி (Neha Rastogi) வாயிலாக  டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் டெல்லி நகரில் பொது இடங்களில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கவும் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க கட்டுமானங்கள் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறைய தாய்மார்கள் பொது இடங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுவதாகவும் இளம் தாய்மார்கள் பொது வெளியில் கொடுக்க வெட்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் குழந்தைகளுக்கு உணவு அளிப்பது கடினமான செயலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான மையங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது. தனி மனித சுதந்திரத்தைக் காப்பதும் அதை அமல்படுத்துவதும் அரசின் கடமையே. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு 4 வார காலத்துக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 


[X] Close

[X] Close