நடிகை ரேவதி உள்ளிட்டோரிடம் ஆகஸ்ட் 7-ல் சந்தித்து பேசுகிறது 'அம்மா!’

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' நிர்வாகிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி நடிகை ரேவதி உள்ளிட்ட மூன்று நடிகைகளைச் சந்தித்துப் பேசுகின்றனர்.

ரேவதி

மலையாள முன்னணி நடிகையைக் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'விலிருந்து திலீப் நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்கத் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திலீப் மீண்டும் அம்மா'வில் சேர்க்கப்பட்டார். இதற்கு நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நடிகை ரம்யா நம்பீசன்  மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை உட்பட 4 நடிகைகள் நடிகர் சங்கத்தைவிட்டு விலகினர். மேலும், தமிழ் நடிகைகள் ரேவதி தலைமையில் நடிகர் சங்கக் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

திலீப்

இதற்கிடையில் திலீப் நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ``நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் செயல்பட விரும்பவில்லை. நான் இந்த வழக்கிலிருந்து நிரபராதியாகி வெளியே வருவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மோகன்லால், இப்போது சங்கத்தில் திலீப் இல்லை என்றும் மீண்டும் பொதுக்குழு நடத்துவது குறித்த நடிகைகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் திலீப் விவகாரம் குறித்து ஆகஸ்ட் 7-ம் தேதி நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோரை சந்தித்து பேசுவது என 'அம்மா' செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடிகைகள் கூட்டமைப்பான டபிள்யூ.சி.சி-யுடன் பேச்சுவார்த்தை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!