``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், அதிக ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையிலும், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் கிராமங்கள் முழுவதுமாக மின்மயமாக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருக்கிறார். 

பிரதமர் மோடி

மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் மின்சார வசதியைப் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அவர், "என்னுடைய தலைமையிலான அரசு, மின்மயமாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, மின் விநியோகம் பரவலாக நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்ற சீர்திருத்தத்தையும் வலியுறுத்தி வருகிறது. கடந்த 70 ஆண்டுகளாக 18,000 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்துதரப்படும் என்று உறுதியளித்தது. அப்போதைய ஆளும் கட்சியின் குடியரசுத் தலைவர் ஒருபடி மேலே போய், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்றார். ஆனால், அவர்களின் நீண்டகால ஆட்சியின்போது, அந்த வாக்குறுதிகள் எதுவுமே நடக்கவில்லை. 

கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தினம். ஏனென்றால், மணிப்பூரின் லீசாங் கிராமம், நாட்டிலேயே மின் வசதியைல் கடைசியாகப் பெற்ற கிராமமாக உருவானது. மின் தொகுப்புடன் இணைக்கப்பட்ட கடைசி கிராமம் அதுவே. மலைப்பகுதிகள், யாரும் எளிதில் சென்றடைய முடியாத கிராமங்கள் என 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமங்களை யாரும் எளிதில் அடைய முடியாத நிலையிலும், அர்ப்பணிப்புடன் கூடிய குழுவினர், அந்தப் பகுதிகளுக்கும் மின்வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் கிழக்குப் பகுதி மாநிலங்கள் முக்கியப் பங்காற்ற முடியும். கிழக்கு இந்தியப் பகுதிகளை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என்றார். 

அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதி என்ற உறுதிமொழியைக் கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் தான் அளித்ததாகவும் இந்தியாவில் உள்ள இருண்ட பகுதிகள் அனைத்தையும் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

அருணாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள், பிரதமருடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் தொடர்புகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!