`டெல்லியில் வணிகர்கள் பேரணி..!’ - விக்கிரமராஜா தகவல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லவுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில், ``சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன மத்திய, மாநில அரசுகள் ஆளுகின்ற இவ்வேளையில் அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் மறைமுகமாகப் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து இந்திய சில்லறை வணிகத்தைக் கைப்பற்றுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் வணிகர்களைப் பாதிக்கின்ற சட்டவிதிகளில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் 28 சதவிகிதம், 18 சதவிகிதம் என்று இருக்கும் வரியை முழுமையாக அகற்றி 5 சதவிகிதம், 12 சதவிகிதம் என்ற அளவில் மட்டும் வரியை அமல்படுத்த வேண்டும். சாமானிய வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி படிவங்கள் தாக்கல் செய்வதை மேலும் எளிமைப்படுத்திட வேண்டும். இ-வே பில்லுக்கான குறைந்தபட்ச தூரம் 20 கிலோ மீட்டர் எனவும் உச்ச வரம்புத் தொகையை ரூ.2 லட்சம் எனவும் மாற்ற வேண்டும். வணிகர்களை குற்றவாளிகளாகச் சித்திரித்து சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதங்கள் விதிப்பதை நிறுத்த வேண்டும்.

ஊதியமில்லாத அரசு ஊழியர்களாகச் செயல்படும் வணிகர்களின் நலன் கருதி ஓய்வூதியம் மற்றும் இழப்பீட்டு நிவாரணங்கள் வழங்க வேண்டும். நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்ற ரசாயன தொழிற்சாலைகள், உற்பத்திக் கூடங்களில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுச் சட்டங்களை முறையாகவும் கண்டிப்புடனும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் அதிகமான மரங்களை நட்டு பராமரிப்பதாகத் தவறான தகவலைக் கூறி ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தும் கட்டண உயர்வை நிறுத்த வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைத்து நியாயமான சுங்கச்சாவடி வரியை வசூலிக்க உத்தரவிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஆறுகளை ஒருங்கிணைத்து மாநிலங்களுக்கு இடையே சுமுகமான நிலையை ஏற்படுத்தி நீர் வளம்மிக்க புதிய பாரதம் படைத்திட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து ஜூலை 24-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல இருக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!