என்னவாகும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்?

நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாமல் இல்லை. இருந்தாலும், மக்களின் கவனத்தைத் திருப்பவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றவும் இந்தத் தீர்மானத்தை அக்கட்சிகள் கொண்டுவந்துள்ளன.

என்னவாகும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் தரப்பில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிபெறச் செய்வது என்று முடிவெடுத்து, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆளும் பி.ஜே.பி-யோ, தங்களுக்குப் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வியடையும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறி தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. முந்தைய கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான அமளி காரணமாக, எந்த அலுவல்களும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இப்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்றே, தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டதும், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே-வும் காங்கிரஸ் சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் கேட்டுக்கொண்டார்.

தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 20-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நாடாளுமன்றம் - நம்பிக்கையில்லா தீர்மானம்

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்முறையாக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும், மக்களவையில் பி.ஜே.பி-க்கு மட்டும் 273 உறுப்பினர்கள் உள்ளதால், இந்தத் தீர்மானம் வெற்றிபெறாது என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். 535 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் சபாநாயகருடன் சேர்த்து பி.ஜே.பி-க்கு 274 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர, சிவசேனா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தால், மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு மத்திய அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

என்றாலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்க மாட்டார் என்பதால், அதை வைத்து இந்தக் கூட்டத்தொடரையும் முடக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், மத்திய அரசின் உத்தி வேறுவிதமாக அமைந்து விட்டது.

எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்கும் முடிவை எடுக்க பிரதமர் மோடியும், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்ததாக பி.ஜே.பி. மூத்தத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதாலேயே, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதித்து, வாக்கெடுப்பை நடத்தி அரசு வெற்றிபெற்று விட்டால், எஞ்சியுள்ள கூட்டத்தொடரையாவது சுமுகமாக நடத்தி விடலாம் என்பது மத்திய அரசின் திட்டம் என்று அவர் குறிப்பிட்டார். 

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. என்றாலும் ஆளும் கூட்டணிக்கு போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பது பலமாகப் பார்க்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து எம்.பி-க்களும் தவறாமல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றக் கட்சிகளின் கொறடாவும், தத்தமது கட்சிகளின் உறுப்பினர்கள் தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்.பி.க்கள் நிலவரம்

தீர்மானத்தை எதிர்க்கும் ஆளும் கூட்டணி தீர்மானத்தை ஆதரிக்கும் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்காதவை 

பி.ஜே.பி - 273 

சிவசேனா -18

லோக் ஜனசக்தி - 6 

அகாலி தளம் - 4 

ஆர்.எல்.எஸ்.பி.  - 3 

அப்னா தளம் - 2

ஐக்கிய ஜனதா தளம் - 2

என்பிபி -1

என்டிபிபி -1

எஸ்டிஎஃப் -1

என்.ஆர். காங்கிரஸ் 1

அ.தி.மு.க - 37 

காங்கிரஸ்  - 48 

திரிணாமுல் காங்கிரஸ் - 34 

தெலுங்குதேசம் - 16

சி.பி.எம் - 9 

என்.சி.பி  - 7

சமாஜ்வாடி -7

ஆர்.ஜே.டி - 4

ஓய்.எஸ்.ஆர். காங் - 4

ஏ.ஐ.யு.டி.எஃப் - 3

இதரக் கட்சிகள் - 11

பி.ஜே.டி - 20

டி.ஆர்.எஸ் - 11

பி.டி.பி - 1

பா.ம.க - 1

ஸ்வபிமானி பக்‌ஷா - 1 

சுயேச்சைகள் - 3

ஐ.என்.எல்.டி - 2

நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியாமல் இல்லை. இருந்தாலும், மக்களின் கவனத்தைத் திருப்பவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றவும் இந்தத் தீர்மானத்தை அக்கட்சிகள் கொண்டுவந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!