வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (19/07/2018)

கடைசி தொடர்பு:21:19 (19/07/2018)

`இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்!’ - சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி

இரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

கனிமொழி

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீன்வர்கள் மீன்பிடித் தொழிலுக்காக இரான் நாட்டுக்கு சென்றனர். தனியார் டிராவல் ஏஜென்சி மூலம் இரான் சென்றவர்களுக்கு முகமது சால் என்பவரது விசைப்படகில் வேலை கிடைத்தது.  6 மாத காலமாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு, முறையான சம்பளம், உணவு தங்குவதற்கான இடவசதி போன்றவை மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசைப்படகு உரிமையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு அனுப்பாமல், கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்கு மீன்வர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விசைப்படகு உரிமையாளர் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் தங்களது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அங்கு நேர்ந்த இன்னல்களைத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகத் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரானில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதி அளித்துள்ளார்.