கேரளத்தைப் புரட்டிப்போட்ட `பேய்' மழை! 14 மாவட்ட கள நிலவரம் #KeralaRain

கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக 14 மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. நாளை வரை மழை தொடரும் என்பதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளத்தைப் புரட்டிப்போட்ட `பேய்' மழை! 14 மாவட்ட கள நிலவரம் #KeralaRain

கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக 14 மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இன்னும் சில நாள்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 5-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். மத்திய கேரளத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடும் குளிர் காரணமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே 12 பேர் இறந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டயம், மலப்புறம் மாவட்டங்களில் தலா இரண்டு பேர் வீதம் இறந்துள்ளனர். ஆலப்புழா மாவட்டம் சென்னி தலையில் படகு கவிழ்ந்து ஒருவர் இறந்தார். குளத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் இறந்தார். கோட்டயம் மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவன் அலன் (14) பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. கோட்டயம் அழுதா நதியில் தவறி விழுந்த ஒருவரது உடல் நேற்று மீட்கப்பட்டது. மலப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி நின்ற வயலில் மின் கம்பி அறுந்து விழுந்ததைக் கவனிக்காமல் சென்ற நாராயணன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். கடலுண்டி புழையில் மாயமான 7 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கேரள மழை

காசர்கோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் இரண்டு மாடி கட்டடம் மழைக் காரணமாக உடைந்து விழுந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 3.44 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தாலுகாக்களில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது மழை பெய்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைப் பகுதி மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் விலகவில்லை.

எர்ணாகுளம் மாவட்டத்தில் மழை சற்று குறைந்தது. ஆனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் கடந்த சில வருடங்களில் கண்டிராத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தீவாக மாறின. காயாங்குளம் - மாவேலிக்கரை சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மழை காரணமாக 18 வீடுகள் முற்றிலும் இடிந்தன. 505 வீடுகள் பாதி இடிந்துள்ளன. தென்மலை பரப்பார் அணையில் தண்ணீர் மட்டம் 97.7 சதவிகிதம் நிறைந்துள்ளதால் எந்த நேரமும் திறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மழை

திருவனந்தபுரம் மாவட்டத்தில் இப்போது மழை குறைந்துள்ளது. ஆனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் வீட்டில் முடங்கினர். ரயில் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. பத்தணம்திட்டா மாவட்டம் திருவல்லா தாலுகாவில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மூணார் டவுண் பைபாஸ் சாலையில் மண்சரிவுகளை அகற்றும் பணி இன்னும் முடியாததால் போக்குவரத்து முடங்கியுள்ளது. பின்முடி அணை மற்றும் மலங்கரை அணைகளின் ஷட்டர் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் 2,000 ஹெக்டேர்  விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அட்டப்பாடி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தாலும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. மலப்புரம் மாவட்டத்தில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலாற்றூர், பொன்னானி பகுதிகளில் அதிக அளவு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மழை

வயநாட்டில் மழையால் மூன்று வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டன. சுசிப்பாறை அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் மட்டம் அதிகரித்து வருவதால் ரயில்வே ரெட் அலார்ட் அறிவித்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் அங்கன்வாடி தொடங்கி கல்லூரி வரை அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. கோட்டயத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கிய நூற்றுக்கணக்கான குடும்பத்தினரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர்.

கேரள மழை

கோட்டயம் வழியாக கடந்து போகும் 10 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீனச்சல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரயில்வே துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குருவாயூர் - புனலூர், திருநெல்வேலி - பாலக்காடு, பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ், கோட்டயம் - எர்ணாகுளம், கொல்லம் - எர்ணாகுளம் மெமு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற ரயில்கள் குறைந்த அளவு வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!