பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு!

விவசாயிகளின் போராட்டத்தை கவனத்தில்கொண்ட மகாராஷ்டிர அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில், அந்த மாநிலத்தின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இது தவிர, அகமத் நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட், பர்பானி உள்ளிட்ட மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும், பால் உற்பத்தியை முக்கியத் தொழிலாகச் செய்துவருகின்றனர். இந்தப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலை 17 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. பிறகு, அந்தப் பால் பதப்படுத்தப்பட்டு, குளிரூட்டி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், பாலைக் கொள்முதல் செய்யும் நிறுவனத்தினர், கொள்ளை லாபம் அடைந்துவந்தனர். இதைச் சுட்டிக்காட்டிய பால் உற்பத்தியாளர்கள், ``கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தித் தருமாறும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த வேண்டும்'' என வலியுறுத்தியும், கடந்த சில நாள்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். 

இதையடுத்து, நேற்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!