சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி 2022-க்குள் முடிவடையும் - மத்திய அரசு!

சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி 2022-க்குள் முடிவடையும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம்

மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது, வட சென்னை தொகுதி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, சென்னையில் விமான நிலையம் நவீனமயமாக்கல் பணிகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமான போக்குவரத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதிலளித்துப் பேசினார். `மத்திய அரசு கொள்கை அளவில் 20 பசுமை வெளி விமானநிலையங்களை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.  சென்னை விமானநிலையத்தின் கொள்ளளவை விரிவாக்கியுள்ளோம். இரண்டாம் கட்ட நவீனமயமாக்கும் பணிக்கு 2,467 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்  முடிவடையும்.

சென்னை விமானநிலையத்தில் முந்தைய கட்டடங்கள், கட்டுமானம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுவிட்டன. நாங்கள் நிலைமையை முழுமையாகக் கண்காணித்துவருகிறோம்' என்றார். இதேபோல மதுரை அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பாலகிருஷ்ணன், மதுரை விமானநிலையத்தைத் தரம் உயர்த்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்றார். இதற்கு பதிலளித்த இணையமைச்சர், `மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்துவதுகுறித்து கோரிக்கை உள்ளது. விமானநிலையத்தைத் தரம் உயர்த்துவது தொடர்பாக ஒவ்வொரு விமானநிலையத்துக்கும் ஒரு குழு உள்ளது, அந்தக் குழு  தரம் உயர்ந்துவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்யும்.அதன் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று  தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!