`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி! | Central Minster says reservation strictly follow in the university and college teacher recruitment

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/07/2018)

கடைசி தொடர்பு:08:36 (20/07/2018)

`ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும்' - மத்திய அமைச்சர் உறுதி!

``பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும்" என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு

நேற்று (19.07.2018) மாநிலங்களவையில், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவிகித ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது" என்று பதிலளித்துள்ளார். 

இதற்கிடையில் நேற்று, மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், `கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிப்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதனால், அனைத்து மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய அரசிடம் உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும், புதியதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் அனைத்தையும்  ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது, பல்கலைக்கழக மானியக்குழு. 

பல்கலைக்கழக மானியக்குழு

இந்த சுற்றறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடுகுறித்த வழக்கு, 13.08.2018 அன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது யு.ஜி.சி.