வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:09:40 (20/07/2018)

நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நாடு முழுவதும் 3,000 பயிற்சி மையங்கள்!

``நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் நாடு முழுவதும் 3000 மையங்கள் ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளது, மத்திய அரசின் புதிய தேசியத் திறனறிவு அமைப்பு. 

பயிற்சி மையங்கள்

மருத்துவப் படிப்பில் சேர நீட் (NEET) தேர்வும், ஐ.ஐ.டி மற்றும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர ஜே.இ.இ தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்த தகுதித்தேர்வுகளை நடத்த, புதியதாக தேசியத் திறனறிவு நிறுவனத்தை (National Testing Agency) உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம், ``மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் 3000 மையங்கள் உருவாக்கப்படும்" என்று அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நிர்வாகமே நடத்தியது. பல்வேறு தகுதித்தேர்வுகளை நடத்துவதால், தமது வழக்கமான கல்விப் பணி பாதிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் தெரவித்தது.  அதனால் மத்திய அரசு, புதியதாக தேசியத் திறனறிவு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. 

இந்த அமைப்பு, முதல்முறையாக தகுதித்தேர்வை நடத்துவதால், அதற்கு முன்னோட்டமாக நாடு முழுவதும் 3000 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு எழுதும் பயிற்சியை வழங்க உள்ளது. இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை. இதுகுறித்துப் பேசிய தேசியத் திறனறிவு நிறுவனத்தின் உயர் அதிகாரி, "நீட் மற்றும் இதர தகுதித்தேர்வுகளுக்கு பாடத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு பாடத்திட்டமே அடுத்து நடத்த இருக்கும் தேர்வுக்கும் பின்பற்றப்படும். ஆனால், அனைத்துத் தேர்வுகளும் கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும். இதற்கு, மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் வார இறுதி நாள்களில் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளுக்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். 

தேசியத் திறனறிவு நிறுவனம், 'நீட் (NEET), ஜே.இ.இ (JEE) மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு நடத்தப்படும் நெட் (National Elegibiltiy Test) தேர்வுகளுக்கான  கால அட்டவணையை செப்டம்பர் மாதம் முதல்தேதி வெளியிடப்படும்' என்று தெரிவித்துள்ளது.