`நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் ட்வீட்!

'நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் வெளியான பிறகு, ஆளும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம். ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததைக் காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து பிரிந்தார் சந்திரபாபு நாயுடு.  அதன்பின், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தொடர்ந்து வலியுறுத்திவந்தன. 

ஆனால் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, அ.தி.மு.க போன்ற கட்சிகள் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவந்ததால், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர்  சுமித்ரா மகாஜன்  ஏற்கவில்லை. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது,  தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதை ஏற்ற சுமித்ரா மகாஜன், வரும் 20-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது, ``நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள். என்னுடைய சக எம்.பி-க்கள் ஆக்கபூர்வமாகவும், விரிவாகவும், அமளியின்றி விவாதம் நடத்துவார்கள் என நம்புகிறேன். நாம் மக்களுக்கும், அரசியலமைப்புக்கும் கடமைப்பட்டுள்ளோம். நாடே நம்மை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது." 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!