வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:11:45 (20/07/2018)

மகள்கள் அளித்த ஊக்கம்..! - 55 வயதில் பி.ஏ தேர்வு எழுதிய எம்.எல்.ஏ.

55 வயதான பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து பி.ஏ முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இலவச பயிற்சிமையம் ஒன்றையும் இவர் நடத்திவருகிறார். 

பூல் சிங் மீனா எம் எல் ஏ

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் சட்டமன்றத் தொகுதியில், பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பூல் சிங் மீனா. இவர், 7-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். இந்த நிலையில், தன் மகள்கள் அளித்த ஊக்கத்தினால், தற்போது பி.ஏ. முதலாம் ஆண்டு தேர்வை வெற்றிகரமாக எழுதியுள்ளார். 

இதுகுறித்து பூல் சிங் மீனா கூறுகையில், `ராணுவத்தில் பணியாற்றிய தன் தந்தை, பணியின்போதே மரணம் அடைந்தார். அதனால், சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. 7-ம் வகுப்புடன் பாதியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டேன். அதன்பின், அரசியலில் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டேன். எனக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அவர்கள், அளித்த ஊக்கத்தினால், மீண்டும் என் படிப்பைத் தொடங்கினேன். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்த பின் பட்டப் படிப்பைத் தொடங்கியுள்ளேன். ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன்' என்றார் நம்பிக்கையுடன். 

`என் தந்தை மிகவும் விடாமுயற்சியுடன் பணிபுரிந்துவருகிறார். எங்கள் விருப்பத்துக்கு இணங்க 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வை எழுதினார். தற்போது பட்டப்படிப்பைத் தொடர்ந்துவருகிறார். என் தந்தை எடுத்துள்ள முயற்சி பெருமையாக உள்ளது' என்று நெகிழ்ந்து பேசினார் பூல் சிங்கின் மூன்றாவது மகள் தீபிகா.