தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ்! | central government sent another notice to whats app

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (20/07/2018)

கடைசி தொடர்பு:11:29 (20/07/2018)

தொடரும் வதந்திகள் - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் மத்திய அரசு நோட்டீஸ்!

'வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவுவதைத் தடுக்காவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக 2-வது முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்.

வாட்ஸ் அப் 

இந்தியாவில், வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துவருகிறது. அதிலும் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டுவருகிறது.  சமீபத்தில், மத்திய அரசு வெளியிட்ட குழந்தைகள் கடத்தல் தொடர்பான புள்ளிவிவர அறிக்கையில், `வாட்ஸ் அப் வதந்தியால் மட்டும்    20-க்கும் மேற்பட்டோர், பொதுமக்களால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்' எனத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு. 

`பரவும் வதந்திகளைத் தடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது' என்று மத்திய அரசுக்குப் பதிலளித்தது வாஸ்ட் அப் நிறுவனம். இருப்பினும், வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள், வேலை காரணமாக வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்பவர்கள் என அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், `வதந்திகளைத் தடுப்பதற்காக ஃபார்வர்டு என்ற வசதியை அறிமுகம்செய்தும் வதந்திகள் பரவிவருகின்றன. போலித் தகவல் இன்றளவும் பகிரப்பட்டுவருகிறது. இதைக் கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள்' எனப் பல கேள்விகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால்,  சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது மத்திய அரசு.


[X] Close

[X] Close