' பாப்பம்மாள் நிலைதான் பீகார் பெண்ணுக்கும் நேர்ந்தது!' - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் பாப்பம்மாள், 'உணவு சமைக்கக் கூடாது' என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 84 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ' இதேபோன்ற ஒரு சம்பவம் பீகாரிலும் நடந்தது' என நினைவுகூர்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்கள். 

அவினாசி அருகே உள்ள திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சத்துணவு ஊழியராக சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார், பாப்பம்மாள்.  இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பள்ளியில் படிக்கும் பிற சமூகத்து மாணவர்களுடைய பெற்றோர்கள், அவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பள்ளி வளாகத்தைப் பூட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேற்று சமூகத்து மக்களின் எதிர்ப்பைக் கவனித்த அதிகாரிகள், சத்துணவு ஊழியர் பாப்பம்மாளை, அவர் இதற்கு முன் பணியாற்றிய அதே பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் களமிறங்கின. பாப்பம்மாளுக்கு ஆதரவாகப் போராட்டம் வெடித்தையடுத்து, மீண்டும் அதே பள்ளியில் அவருக்குப் பணி உத்தரவு வழங்கப்பட்டது. 

விதவைப் பெண் சமைத்த உணவைச் சாப்பிடும் மாவட்ட ஆட்சியர்

இதேபோன்ற ஒரு சம்பவம், மூன்று வருடங்களுக்கு முன் பீகாரில் நடந்தது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தில்  உள்ள பள்ளியில், கணவரை இழந்த பெண் ஒருவர் சமையலராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள். இந்த வேலை ஒன்றுதான் அவருக்கு வாழ்வாதாரமாக இருந்தது. ' விதவைப்பெண் சமையல் செய்தால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என்று பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். பல நாள்கள் பள்ளி மூடப்பட்டுக்கிடந்தது. இதனால் மனம் நொந்துபோன பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் ராகுல் குமார் சற்று வித்தியாசமாக இந்தப் பிரச்னையைக் கையாண்டார். அந்தப் பள்ளிக்கு கல்வி அதிகாரிகளுடன் சென்றவர், அந்தப் பெண்ணை சமையல் செய்யுமாறு கூறினார். பின்னர், அந்த உணவை மாவட்ட ஆட்சியரே தரையில் அமர்ந்து சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!