`பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள்

'பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை' என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

கேரளாவில் நிலவும் பல்வேறு பிரச்னைகள்குறித்து பேசுவதற்காக, பிரதமர் மோடியை சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிகேட்டார். ஆனால் அவருக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்தது. தொடர்ந்து மூன்று முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கேரளாவுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களின் அளவு குறைக்கப்பட்டது. இது தொடர்பாகத் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்க, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் நான்காவது முறையாக டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்திக்க முயன்றார்கள். ஆனால், நான்காவது முறையும் அனுமதி மறுக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து முறையிடுங்கள் என பிரதமர் அலுவலகம் சார்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில், `பிரதமர் கேரள மக்களைப் புறக்கணிக்கிறார்' என அம்மாநில கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கின. 

இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு பினராயி விஜயனை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கினார். அதன்படி, 22 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரை நேற்று சந்தித்தார் பினராயி விஜயன். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம், ``கேரளாவில் மழை, வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றைப் பார்வையிட மத்தியக்குழுவை கேரளாவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், கேரளாவுக்கான உணவுப் பொருள்களின் அளவை அதிகரித்து வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. எங்கள் மாநிலத்தின் பல கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார். மொத்தத்தில், அவருடனான சந்திப்பில் சிறிதுகூட பலனில்லை. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை" என்று பினராயி தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!