வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (20/07/2018)

கடைசி தொடர்பு:14:10 (20/07/2018)

நீட் தேர்வு கருணை மதிப்பெண்ணுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி!

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். நீட் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீட்

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, `தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும், தலா 4 மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடும், அதற்கு எதிராக ரங்கராஜன் எம்.பி சார்பில் கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், `தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது' என்று தீர்ப்பளித்துள்ளது. இதனால், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.