வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (20/07/2018)

கடைசி தொடர்பு:15:52 (20/07/2018)

`அங்கு உனக்குப் பாதுகாப்பில்லை!’ - சென்னைக்கு வர ஸ்விஸ் வீராங்கனைக்குத் தடைபோட்ட பெற்றோர்

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க, ஸ்விட்சர்லாந்தின் நட்சத்திர வீராங்கனையை அவரின் பெற்றோர்கள் அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆம்ப்ரி அலின்க்ஸ்
 

கடந்த 18-ம் தேதி சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. 28 உலக நாடுகளிலிருந்து 171 ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் ஜூனியர் வீராங்கனையான ஆம்ப்ரி அலின்க்ஸ் இப்போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம், ‘இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்பது தானாம்.  இதுகுறித்து சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் பாஸ்கல் செய்தியாளர்களிடம் பேசியபோது  `இந்தியாவின் சென்னை நகரில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடர் நடக்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியான அதே நாளே, 16 வயதான அம்ரே அலின்க்ஸின் பெற்றோர்கள் அவரை இத்தொடரில் பங்கேற்கக் கூடாது என்று கூறிவிட்டனர். இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால், அவர்கள் தன் மகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மறுத்துவிட்டனர். இணையத்தில் வரும் செய்திகளைப் பார்த்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அம்ரே ஸ்விஸின் நம்பர் ஒன் வீராங்கனை.  அவர்கள் விளையாட்டைவிட தன் மகளின் பாதுகாப்பை முக்கியம் என்று நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்குப் பாதுகாப்பு குறைந்த நாடு என  இந்தியாவின் பெயரை அறிவித்தது. இந்த ஆய்வு அறிக்கையும், பெண்களுக்கு எதிராக இந்தியாவில் ஆங்காங்கே நடக்கும் குற்றச்செயல்களுமே ஸ்விஸ் பெற்றோர்களின் அச்சத்துக்குக் காரணம்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க