வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (20/07/2018)

`கணவனுக்குத் தெரிந்தவர்கள்தான் குற்றவாளிகள்!’ - சண்டிகரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சண்டிகரில், 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை 40 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாகச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இளம் பெண்

ஹரியானா மாநிலம், சண்டிகரில் உள்ள பஞ்ச்குலா என்ற பகுதியில் விருந்தினர் மாளிகை ஒன்றில் 4 நாளாகப் பெண் ஒருவரை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தக் குற்றச் சம்பவத்தில் 40 பேர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று சண்டிகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோர்னி ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் வேலை தேடி, கடந்த ஜூலை 15-ம் தேதியன்று அந்தப் பெண் சென்றுள்ளார். அவரை, 40 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து 4 நாள்கள் (15 .7.2018 முதல் 18.7.2018 வரை) அப்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அப்பெண்ணின் கணவனுக்கு நன்கு பரிச்சயமானவர். அவர்தான், வேலை வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அந்த நபரை நம்பிச் சென்ற பெண்ணுக்கு இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளோம். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.