வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:18:40 (20/07/2018)

இனிமேல் 5 ஃபார்வேர்டு மெசேஜ்தான்? - வாட்ஸ்அப் எடுக்கும் புதிய முயற்சி இது!

வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளைக் கட்டுக்குள் கொண்டு வர புதிய நடவடிக்கை ஒன்றை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இனிமேல், ஐந்து நபர்களுக்கு மேல் ஃபார்வேர்டு மெசேஜ்களை ஒருவரால் அனுப்ப முடியாது. 

வாட்ஸ் அப் வதந்திகள்

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், இதன்  மூலம் பரவும் வதந்திகளும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகம். அதிலும் குழந்தைக் கடத்தல் தொடர்பான வதந்திகள் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில், மத்திய அரசு வெளியிட்ட குழந்தைகள் கடத்தல் தொடர்பான புள்ளி விவர அறிக்கையில், `வாட்ஸ்அப் வதந்தியால் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்' எனத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்நிறுவனத்துக்குச் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு. 

`பரவும் வதந்திகளைத் தடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது' என்று மத்திய அரசுக்குப் பதிலளித்தது வாஸ்ட்அப் நிறுவனம். இருப்பினும், வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்குச் சுற்றுலா செல்பவர்கள், வேலை காரணமாக வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்பவர்கள் என அப்பாவி மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் அந்நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, பரவும் வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை எடுக்க உள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள் உள்ளிட்ட ஃபார்வேர்டு மெசேஜ்களை இனி ஐந்துக்கும் அதிகமான நபர்களுக்கு ஃபார்வேர்டு செய்ய முடியாது. இந்த முயற்சியைச் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால், வாட்ஸ்அப் வதந்திகள் கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.