வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (20/07/2018)

கௌரி லங்கேஷ் கொலையில் `கொலையாளிக்கு பைக் ஓட்டிய’ நபர் கைது!

கௌரி லங்கேஷ்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7-வது சந்தேக நபரை கர்நாடக போலீஸ் கைதுசெய்துள்ளது. 

கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் மோகன் நாயக் (வயது 50), தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரி, எம்.என்.அஞ்சேத் தெரிவித்துள்ளார். சம்பாஜே எனும் இடத்தில் நேற்று கைதுசெய்யப்பட்ட இந்த நபரை, 6 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப பெங்களூரு பெருநகர கூடுதல் முதன்மை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.  இவ்வழக்கின் 6-வது சந்தேக நபரான 26 வயதான பரசுராம் வாக்மோர், கடந்த மாதம், விஜய்புரா மாவட்டத்தின் சிந்தகியில் கைதுசெய்யப்பட்டார். கௌரி லங்கேஷை, தானே சுட்டுக்கொன்றதாக போலீஸில் அவன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். 

கௌரில் லங்கேஷ்

கௌரி லங்கேஷைச் ’சுட்ட’ பரசுராமுக்கு, கொலை நிகழ்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதங்களைக் கொடுத்திருக்கக்கூடும் என கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கௌரியைக் கொல்லும்முன்னரும் பின்னரும் பரசுராமை பைக்கில் கூட்டிச் சென்றவன் என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக, மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் எனும் ஹொட்டமஞ்சா உட்பட 5 பேர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் காலே மற்றும் தெக்வேகர் இருவரும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். எதுவெ மற்றும் சுஜீத்குமார் இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதலில் கைதுசெய்யப்பட்ட நவீன்குமார், பெங்களூரில் ஆயுதங்களை விற்கமுயன்றபோது பிடிபட்டான். தான் `இந்து யுவசேனா' எனும் அமைப்பின் நிறுவனர் என்று இவர் கூறிவந்துள்ளதும் அம்பலமானது. 

மற்ற நால்வர் கும்பலை கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவான் கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்து விசாரித்தபோதே, கௌரி படுகொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என போலீஸ் முடிவுக்கு வந்தது.