வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (20/07/2018)

கடைசி தொடர்பு:19:29 (20/07/2018)

ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்!- #BhookampAagaya

நாடாளுமன்ற மக்களவையில் ராகுல்காந்தியின் பேச்சால் ட்விட்டரில் பூகம்பம் வந்துவிட்டது (#BhookampAagaya) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

ராகுல் காந்தி

`பூகம்பம் வந்துவிட்டது’ (Bhookamp Aagaya) யாரும் பதற வேண்டாம் இது ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக். ராகுல்காந்திதான் இந்த ஹேஷ்டேக்குக்குச் சொந்தக்காரர். மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார். இது ராகுலின் பொன்னான நாள் என்று கூட கூறலாம். மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் உரையாற்றினர். 

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது மத்திய அரசை ராகுல் கடுமையாகச் சாடினார். அரசாங்கம் இது குறித்து விவாதம் நடத்தி என்னைப் பேச அனுமதித்தால் பூகம்பம் வருவதை நீங்கள் உணரலாம் என்றார். மேலும், கடந்த ஏப்ரல் மாதத்திலும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் சவால் விட்டார். நாடாளுமன்றத்தில் என்னிடம் 15 நிமிடம் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என்றார். ராகுல் மீது பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்தனர். ராகுலின் இன்றைய பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக இணையதளவாசிகள் ட்வீட் செய்து வருகின்றனர். #BhookampAagaya என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதேநேரம் #Rahulgandhi ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது.