மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! | No confidence vote fails

வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (20/07/2018)

கடைசி தொடர்பு:23:50 (20/07/2018)

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.

மோடி

தெலுங்கு தேசம் சார்பில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள். உள்ளிட்டவை தீர்மானத்திற்கு ஆதரவளித்தன. இதையடுத்து  காலையில் தீர்மானத்தின் மீது பேசிய அகில இந்திய  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி  மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். பின்னர் தீர்மானம் தொடர்பாக  பிரதமர் மோடி மாலை 6மணி அளவில் பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பேச நீண்ட நேரம் ஆனது. இதனால் 9 மணி அளவில் தன் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது ராகுல் காந்தி முன்வைத்த  பல்வேறு குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்து 1மணிநேரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 325 உறுப்பினர்கள்  வாக்களித்துள்ளனர்.  அதே போல நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.  மொத்தம் 451 பேர் வாக்களித்ததில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்குகளே அதிகம் என்பதால், மத்திய அரசு மீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது; தொடர்ந்து பாஜக அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து மக்களவையை திங்கட்கிழமைக்கு  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.