வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:04:00 (21/07/2018)

``இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' - நிதி ஆயோக் துணைத் தலைவர் நம்பிக்கை!

`இந்தியா உலகின் 2-வது அல்லது 3-வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்'' என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று (20-ம் தேதி) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ``இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் ஒருபகுதியாக இருக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுமட்டுமின்றி, புதிய இந்தியாவை வடிவமைப்பதற்கான ஒரு மாபெரும் இயக்கமாக நீங்கள் உருவாக வேண்டும். இந்த இயக்கத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பங்கை உணர வேண்டும். இந்தியாவில் ஒரு வெளிநாட்டு மற்றும் முதலாளித்துவ வளர்ச்சி மாதிரியை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது மாதிரியானது கண்டிப்பாக அனைத்து மக்களின் நலனை உறுதிப்படுத்துவதோடு, நமது சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் கவனித்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம் நன்றாக வளர்ந்துள்ளது; பிரதமர் மோடி தலைமையின்கீழ், பொருளாதாரம் விரைவான வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. 

உலகில் முக்கியமான பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கு இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. இது அவசியம். எல்லாருக்கும் நிலையான கண்ணியமான வாழ்வைக் கொடுக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதற்காக அடுத்த 30 ஆண்டுகளில் விரைவான இரட்டையிலக்க பொருளாதார வளர்ச்சி நீடித்திருக்க வேண்டும். நாம் ஏற்கெனவே சமூகம் மற்றும் அரசியல் மாற்றங்களை முன்னேற்றுவதில் வெற்றி கண்டுள்ளோம். இதுபோல, பொருளாதார மாற்றங்கள் நிறைவுசெய்யும் தனிமனித வருமானத்தைப் பார்க்கும்போது, 2017-18-ம் ஆண்டில் 1,900 அமெரிக்க டாலராக இருந்தது. இது, 2022-23-ம் ஆண்டில் 3,000 டாலராக இருக்கும். நம்நாடு 100-வது ஆண்டுச்  சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, தனிமனித வருவாய் 10,000 டாலராக இருக்கும். அப்போது, இந்தியா உலகின் 2-வது அல்லது 3-வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்'' என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க