வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:08:30 (21/07/2018)

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய விதிமுறைகள் வெளியீடு!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம்குறித்து புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு. 

ஆசிரியர்கள் நியமனம்

உயர்கல்வியின் தரத்தைப் பராமரிக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்துக்கான புதிய விதிமுறைகள்குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்துக்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்வதற்கான ஒழுங்குமுறை வரைவை, பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது பல்கலைக்கழக மானியக்குழு. இந்த வரைவுகுறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பொதுமக்களின் கருத்துகளையும் உள்ளடங்கிய வகையில் இறுதிவடிவத்தை அரசிதழில் வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு.

பல்கலை. ஆசிரியர் நியமனம்

இந்த அரசிதழில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி/ இணை/ மூத்த பேராசிரியர் மற்றும் கல்வி அலுவலர்கள் நியமனத்துக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய அளவுகள் மற்றும் இந்தப் பதவிகள் சம்பந்தப்பட்ட மற்ற விதிமுறைகளையும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய-மாநில பல்கலைக்கழகங்கள் அதன் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில், ஆசிரியர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

சமீபத்தில், தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 2000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறைந்தபட்ச தகுதிகள்குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதால், விண்ணப்பிக்கத் தயாராக உள்ள பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். 

பல்கலை. ஆசிரியர்கள் நியமனம்இதுகுறித்து தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் மோசே செல்வகுமார், ``பொதுமக்களின் கருத்துக்கேட்பில் தெரிவிக்கப்பட்ட பல கருத்துகளை உள்வாங்கி, விதிமுறைகளை வகுத்து அரசிதழில் வெளியிட்டுள்ளனர். இது நல்ல விஷயமே. இன்னும் சில மாற்றங்கள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குறிப்பாக, மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேசிய அளவில் நடத்தப்படும் தகுதித்தேர்வுக்கும் சம அளவு மதிப்பெண்கள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நெட் (NET) தேர்வுக்கு அதிக மதிப்பெண்ணும், செட் (SET) தேர்வுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்ணும் வழங்கியிருப்பது சரியல்ல. மேலும், இளநிலை ஆராய்ச்சியாளராகத் (JRF) தேர்வாகியிருந்தால், அவர்களுக்குத் தனி மதிப்பெண் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் தவிர்த்திருக்கலாம்.

இதுவரை, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனங்களில் சரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இனியாவது, பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால், தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை தமிழக அரசு கடைப்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்றார்.