வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (21/07/2018)

கடைசி தொடர்பு:08:58 (21/07/2018)

சாதிப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை! - எய்ம்ஸ் தேர்வில் வெற்றிபெற்ற துப்புரவுத் தொழிலாளியின் மகன்

எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில், துப்புரவுத் தொழிலாளியின் மகன் தேர்ச்சிபெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே தேர்வை எதிர்கொண்டு, தேர்ச்சிபெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

எய்ம்ஸ்

Photo Credit - ANI

மத்தியப்பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்துவருபவர் ஆஷாராம் சௌத்ரி. இவரின் தந்தை, சாலையோர துப்புரவுத் தொழிலாளி. வறுமையான சூழ்நிலையிலும் படிப்பைக் கைவிடாத ஆஷாராம் சௌத்ரி, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டார். எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலே வெற்றிபெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 707-வது இடம், ஒ.பி.சி பிரிவில் 141-வது இடத்தைப் பிடித்த ஆஷாராம் சௌத்ரிக்கு, ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. 

தனது வெற்றிகுறித்துப் பேசிய அவர், `'குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்தேன். சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்ற கனவை என் மனதுக்குள் ஆழமாக விதைத்தவர்கள் என் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான். இந்த தருணத்தில், எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், என் படிப்புக்கு நிதி உதவி வழங்கிய தக்‌ஷினா ஃபவுண்டேஷனுக்கும் நன்றி'' என்றார்.