`உலகின் மிகச்சிறந்த நடிகர்' - மோடியைக் கலாய்த்த தெலுங்கு தேசம் எம்.பி!

'பிரதமர் மோடி சிறந்த நடிகராக வருவார்' என தெலுங்கு தேசம் எம்.பி கெசினேனி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். 

மோடி

ஆந்திர மாநில கோரிக்கைக்கு செவிசாய்க்காத மத்திய அரசைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, மிகுந்த எதிர்பார்க்கிடையே நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானம்மீது விவாதம் நடைபெற்றது. இதில், எம்.பி-க்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசையும் பிரதமரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.  அதற்கு பிரதமர் மோடியும் பதிலடிகொடுத்தார்.

பின்னர் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு எதிராக 325 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அதேபோல, தீர்மானத்துக்கு ஆதரவாக 126 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதனால், மத்திய அரசுமீது கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது. இதற்கிடையே, தீர்மானம்குறித்து பிரதமர் மோடி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.  அதில், ராகுல் காந்தியையும் எதிர்க்கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, ``ஆந்திரா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பொய் சொல்கிறார்" எனப் பிரதமர் குறிப்பிட்டார். 

இதற்குப் பதில்கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் எம்.பி கெசினேனி ஸ்ரீனிவாஸ், மக்களவையில் 30 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். ஆனால், அவருக்கு 5 நிமிடம் மட்டுமே சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வழங்கினார். அப்போது பேசிய தெலுங்கு தேசம் எம்.பி., ஸ்ரீனிவாஸ், ``வழக்கம்போல சொற்பொழிவு வழங்கிய பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவரின் ஒன்றரை மணி நேர பேச்சு, பாலிவுட்  ப்ளாக்பஸ்டர் படம் பார்த்தது போல இருந்தது. சிறந்த நாடகம்; சிறந்த நடிப்பு. நிச்சயமாக, உலகின் மிகச் சிறந்த நடிகராக மோடி வருவார்" எனக் குறிப்பிட்டார்.  முன்னதாக, ``உலகின் சிறந்த நடிகர் மோடி'' என குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளத்து குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!