வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (21/07/2018)

கடைசி தொடர்பு:10:40 (21/07/2018)

பாலியல் வன்கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி - மத்தியப்பிரதேசத்தில் சோகம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரை கைது செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை  நடத்திவருவதாகத் தெரிவித்தனர். 

பாலியல்

மத்தியப்பிரதேச மாநிலத்தில்,  சமீபகாலமாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்த வண்ணம்  உள்ளன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிகழும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில், அம்மாநில முதலமைச்சர், `மாநிலத்தில் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிவருவதால், விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் முன்வைத்தார். மேலும், 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அந்த மூன்று பேரையும் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.