வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (21/07/2018)

கடைசி தொடர்பு:11:40 (21/07/2018)

`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `அரசியல் பள்ளியில் பட்டம் பெற்றுவிட்டார்' என சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது. `பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் கொடுத்த அதிர்ச்சி இது' என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு சந்தித்த முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி., ஜெயதேவ் கல்லா, மோடி அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்பிறகு, பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நம்பினார்கள். வேலைவாய்ப்பை அதிகரித்துத்தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், 24 மணி நேரத்துக்கு 400 பேருக்கு மட்டுமே மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது. நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம்' என கடும் ஆவேசமாகப் பேசினார். ராகுலின் இந்த அனல் பறக்கும் பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல், அவரை கட்டித்தழுவினார். ராகுலின் இந்தச் செயல், நேற்று ட்ரெண்டானது. அதுமட்டுமல்லாமல், செய்தித்தாள், ஊடகங்களில் தலையங்கச் செய்தியாகவும் இடம்பெற்றுள்ளது. 

ராகுலின் செயல்பாட்டுக்கு கருத்துத் தெரிவித்துள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், `ராகுல் காந்தி மோடியைக் கட்டிப்பிடித்தது வெறும் கட்டிப்பிடிப்பு மட்டுமல்ல; இது மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி, ராகுல் செயலை மக்கள் நாடகம் என்று கூறுகிறார்கள்; ஆனால், இது அரசியலில் நாடகம். மக்களவையில் ராகுல் நடந்துகொண்டதிலிருந்தே அவர், அரசியல் பள்ளியில் பட்டம் பெற்றுவிட்டார்' என நன்றாகத் தெரிகிறது என்று புகழ்ந்து பேசியுள்ளார். முன்னதாக, கர்நாடகத் தேர்தலின்போது ராகுல் காந்திக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.