வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (21/07/2018)

கடைசி தொடர்பு:15:55 (23/07/2018)

நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு!

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த காரியக் கமிட்டியை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 17-ம் தேதி) மாற்றி அமைத்தார். இந்தப் புதிய கமிட்டியின் முதல் கூட்டம், நாளை (ஜூலை 22 -ம் தேதி) டெல்லியில் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதற்கு முன்பாக, கட்சியில் ஏற்கெனவே இருந்த காரியக் கமிட்டியைக் கலைத்த ராகுல் காந்தி, 'நெறிமுறைக் குழு' ஒன்றை அமைத்தார். 'மாநாட்டு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை நெறிமுறைக்குழு செயல்பாட்டில் இருக்கும்' என்று அவர் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், 23 உறுப்பினர்கள், 19 நிரந்தர அழைப்பாளர்கள் மற்றும் 9 சிறப்பு அழைப்பாளர்கள் அடங்கிய புதிய காரியக் கமிட்டியை ராகுல் காந்தி மாற்றியமைத்தார். 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நிரந்தர அழைப்பாளர்கள் டீமில் இடம்பெற்றுள்ளார். அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கும் காரியக் கமிட்டியில் இடம் உண்டு. மூத்த தலைவர்களுக்கு மட்டுமின்றி, இளம் தலைவர்களுக்கும் காரியக் கமிட்டியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள காரியக் கமிட்டியின் முதல் கூட்டம், நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஒவ்வொரு மாநிலத் தலைவரும் செய்துள்ள தேர்தல் முன்னேற்பாடுகள்குறித்து கேட்டறியும் ராகுல்காந்தி, அடுத்து செய்ய வேண்டிய பணிகள்குறித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும், இந்த டிசம்பரில் வர இருக்கும் மிசோரம் சட்டமன்ற பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர இருக்கும் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் குறித்தும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க