50 வருடங்களுக்கு முன்பு மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு! ஆச்சர்யத் தகவல்கள் | Climbers On Cleaning Mission Find Body Of Soldier Killed In 1968 Plane Crash

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (21/07/2018)

கடைசி தொடர்பு:15:22 (21/07/2018)

50 வருடங்களுக்கு முன்பு மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு! ஆச்சர்யத் தகவல்கள்

இமயமலையின் உத்தரகாசி பகுதியில், 50 வருடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானம்

Photo Credits : Times OF India

ஒடிஸாவைச் சேர்ந்த சில மலையேறும் வீரர்கள், தங்களின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 இடங்களில் தூய்மைசெய்யும் பணியைக் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கினர். அவர்கள் ஒடிஸா சந்திரபாகா கடற்கரை, இமயமலை ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி (இமயமலைப் பகுதி) பகுதியில் அந்தக் குழுவினர் தூய்மைசெய்துகொண்டிருக்கும்போது, மிகவும் வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டுள்ளனர். அதைப் பார்த்தபோது, அது இறந்தவரின் உடல் என்பது தெரியவந்தது. அந்த உடல்களைச் சுற்றி பல உடல்களும் சில இயந்திரங்களும் கிடந்துள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மலையேறும் குழுவினர், உடனடியாக ராணுவத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

பிறகு நடைபெற்ற சோதனையில், அது 50 வருடங்களுக்கு முன்பு மாயமான விமானம் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடல்கள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு AN-12 என்ற இந்திய விமானப்படை விமானம் 102 வீரர்களுடன் சண்டிகரில் இருந்து லே (வடக்கு ஜம்மு-காஷ்மீர்) பகுதிக்குப் பயணித்த விமானம் மாயமானது.  நீண்ட நாள்களாக விமானத்தைத் தேடும் பணிகள் நடைபெற்றும் கண்டுபிடிக்க முடியாமல்போனது. அப்போது, விபத்துக்குள்ளான விமானமும் அதில் பயணித்தவர்களின் உடல்களும்தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிதைந்த உடல்

இதுகுறித்துப் பேசிய மலையேறும் குழுவின் தலைவர் ராஜீவ் ராவத், “கடந்த ஜூலை 16-ம் தேதி, உத்தரகாசி பகுதியை நாங்கள் தூய்மை செய்துகொண்டிருக்கும்போது, முதலில் விமானத்தின் பாகங்களை மட்டும்தான் பார்த்தோம். அதற்கு சற்று தொலைவில், சிதைந்த நிலையில் சில உடல்களும் இருப்பதை எங்கள் குழுவினர் கண்டனர். பிறகு, உடனடியாக அருகில் இருந்த ராணுவத் தளத்துக்குத் தகவல் தெரிவித்தோம். ராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின் முடிவில்தான், அது மாயமான விமானம் எனத் தெரியவந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்கள் தற்போது எப்படி அழியாமல் உள்ளன என்ற சோதனையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.