வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (21/07/2018)

கடைசி தொடர்பு:18:15 (21/07/2018)

`யோகி போல் அரசியல்வாதி ஆகணும்’ - சி.ஏ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவனின் ஆசை

சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் அதுல் அகர்வால். `சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்பதுதான் தன் ஆசை' என அவர் தெரிவித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

சிஏ

Photo Credit- Fb/Atul Agarwal

சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று மிகவும் கடுமையான தேர்வுகளில் ஒன்று இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ) நடத்தும் சி.ஏ தேர்வு. கடந்த மே மாதம் நடைபெற்ற இத்தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் அகர்வால். அதிலும், முதல் 50 இடத்தைப் பிடித்த 11 மாணவர்கள் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். பழைய முறை சி.ஏ தேர்வு; புதிய முறை சி.ஏ தேர்வு என இரண்டு தேர்வுகள் நடந்தது. இதில், மொத்தம் 18.92 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தன் வெற்றி குறித்து பேசிய அதுல் அகர்வால், `12-ம் வகுப்பு முடித்தவுடன், போட்டித் தேர்வுகள் எழுதுவதற்காக முழு கவனத்தையும் செலுத்தினேன். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் படிப்பில் சேர்ந்து பட்டம்பெற்றேன். இதற்கிடையில், சி.ஏ தேர்வுக்காக ஆரம்ப முயற்சியில் ஈடுபடுத்திக்கொண்டேன். சி.ஏ தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இருப்பினும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நாட்டின் சமூகத் துறையின் வளர்ச்சிக்காக நான் வேலை செய்ய விரும்புகிறேன். மேலும், சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். எனது ரோல் மாடலே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான்' என்று உணர்ச்சி பொங்க கூறினார்.