வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (21/07/2018)

பசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

ராஜஸ்தானில், பசுவைக் கடத்த முயன்றவர்கள் என்று சந்தேகித்து இரண்டு நபரைக் கொடூரமாகப் பொது மக்கள் தாங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண முயன்று வருகின்றனர் போலீஸார். 

பசு

Photo Credit - ANI

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பசுவைக் கடத்த முயற்சி செய்தனர் என்று சந்தேகித்த கும்பல் ஒன்று, இரண்டு பேரைக் அடித்து உதைத்துள்ளது. இந்தத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `நேற்று (20.7.2018) இரவு அல்வார் பகுதியில் 2 பேர், பசுக்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட கிராம மக்கள் பசுவைக் கடத்த முயன்றவர்கள் எனக் கருதி அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர், பெயர் அக்பர் கான் என்றும், ஹரியானா மாநிலம் கொல்கோன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பசுவைத்தான் கடத்த முயற்சி செய்தார்களா இல்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண முயன்று வருகிறோம்' என்றார். 

முன்னதாக, `எந்தக் காரணத்துக்காகவும் குடிமகனும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்பாவி மக்கள் கும்பலால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் நேரடியாகத் தலையிட்டு, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த 17-ம் தேதியன்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராஜஸ்தானில் நிகழ்ந்து இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.