கனமழை நிவாரணமாக ரூ.1,000 கோடி கேட்ட கேரளா! - ரூ.80 கோடி ஒதுக்கிய மத்திய அரசு | Centre allocates rs.80 crores to kerala as rain relief

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (21/07/2018)

கடைசி தொடர்பு:17:45 (21/07/2018)

கனமழை நிவாரணமாக ரூ.1,000 கோடி கேட்ட கேரளா! - ரூ.80 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட அழிவுக்கு ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனக் கேட்ட நிலையில், மத்திய அரசு ரூ.80 கோடி நிதி அறிவித்துள்ளது.

கனமழை

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த கனமழை இப்போது சற்று குறைந்துள்ளது. மின்சாரம் தாக்கியும் நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும், கடலில் படகு கவிழ்ந்தும் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல்போன இன்னும் சிலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய கேரளத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ஹெக்டேர் மதிப்புள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்துள்ளன. இந்தநிலையில் கேரள மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் கேட்டிருந்தார்.

கனமழை

அதிலும் குறிப்பாக, விவசாயத்துக்காக மட்டும் ரூ.200 கோடி ரூபாய் நிவாரணம் வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட அழிவுகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பார்வையிட்டார். ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர், நிவாரணமாக மத்திய அரசு ரூ.80 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்தத் தொகை முதற்கட்ட நிவாரணத்தொகை என்பதையும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.