`வெறுப்பை விதைக்கிறார் பிரதமர்’ - மோடியைச் சாடும் ராகுல்

`நம் நாட்டு மக்கள் சிலரின் இதயத்தில் பயம், கோபம், வெறுப்பு ஆகியவற்றை தன் பேச்சின் மூலம் பிரதமர் மோடி விதைத்து வருகிறார்' எனக் குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல்

மத்திய அரசுக்கு எதிராக நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு சந்தித்த முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா, மோடி அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன் பிறகு, பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது' என்ற அவர் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். மேலும், ரஃபேல் போர் விமானங்கள் குறித்தும் பேசினார். இந்த அனல் பறக்கும் பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்ற ராகுல், அவரை கட்டித்தழுவினார். இதன் பிறகு, மக்களவையில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்தார். பிரதமர் இருக்கைக்கு ராகுல் காந்தி வர மிகவும் அவசரப்படுகிறார் என விமர்சித்தார். 

இந்த நிலையில், ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில், `நாடாளுமன்றத்தின் நேற்றைய விவாதத்தின் முக்கிய குறிப்பு' என்று குறிப்பிட்டு பதிவை தொடங்கிய அவர், `நம் நாட்டு மக்கள் சிலரின் இதயத்தில் பயம், கோபம், வெறுப்பு ஆகியவற்றைத் தன் பேச்சின் மூலம் பிரதமர் மோடி விதைத்து வருகிறார். ஒரு வலுவான தேசத்தை உருவாக்க அன்பும் இரக்கமும் தேவை. அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் இரக்கம் உள்ளது என நிரூபிப்போம்' எனப் பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!