`மேற்கு வங்கம்தான் வழிகாட்டும்’ - 2019 தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி கணிப்பு

முன்னாள் மாநிலங்களவை எம்.பி சந்தன் மித்ரா இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். 

சந்தன் மித்ரா
 

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் மித்ரா பா.ஜ.க சார்பில் இரண்டு முறை மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்தவர். பிரபல பத்திரிகையாளர். அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த சந்தன் மித்ரா சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்தார். இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். 

பேரணி
 

மேற்கு வங்கத்தில் 1993-ம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரணி உறுப்பினர்கள் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரிணாமுல் சார்பில் ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 21-ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும். அதன்படி இன்று  நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பேரணியில், மம்தா பானர்ஜி முன்னிலையில், சந்தன் மித்ரா திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். 


மம்தா பானர்ஜி

அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 5 பேர், திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். இந்நிகழ்வை தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி பா.ஜ.க-வுக்கு எதிரான `பா.ஜ.க-வை வெளியேற்றுங்கள்; நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என்னும் பிரசார இயக்கம் தொடங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தல் பா.ஜ.க-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். நூறு இடங்களுக்கும் குறைவான இடங்களில்தான் பா.ஜ.க வெற்றிபெறும். மேற்கு வங்கம் இதற்கு வழிகாட்டும். 2019 பற்றி யோசிக்காமல் 2024 குறித்து பேசி வருகிறார்கள். பண்டல் கட்டக்கூடத் தெரியாதவர்கள், நாட்டைக் கட்டமைக்க போவதாகக் கூறி வருகின்றனர்’ என்றார் காட்டமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!