வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (22/07/2018)

கடைசி தொடர்பு:05:00 (22/07/2018)

கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு!

கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு வரை, தமிழில் தகவல் தொழில்நுட்பப் பாட நூல்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்களை நியமிக்கவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளிகளில் முதல்பாட மொழியாக மலையாளம் உள்ளது. பிற மொழிப்பாடங்களாக ஆங்கிலம், தமிழ், இந்தி, சமஸ்கிருத மொழிபாடங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளிகளில் பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப பாடங்களுக்கு ஏற்கெனவே மலையாளத்தில் நூல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்து வகுப்பு வரை தகவல் தொழில்நுட்ப பாடநூல்களை வழங்கும்படி கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனடிப்படையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உதவியுடன் கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்ப பாடநூல்களை வெளியிட்டுள்ளது. 

மேலும், தமிழ்ப் பாடநூல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க மலையாளத்தைத் தாய்மொழியாக கொண்ட, தமிழறிந்த தமிழாசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது கேரள அரசு. தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் நிரந்தர கணினி ஆசிரியர்களை நியமிக்காத நிலையில் கேரள அரசின் உத்தரவை வரவேற்றுள்ளனர் கல்வியாளர்கள்.