வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (22/07/2018)

கடைசி தொடர்பு:09:29 (22/07/2018)

ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்ற காவலர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் இதுவாகும்.  

ஜம்மு

ஜம்மு- காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் தீவிரவாதிகள், சலீம் ஷா என்ற காவலரை  கடந்த 20-ம் தேதியன்று கடத்திச் சென்றனர். இதனையடுத்து, அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், ரிவான்டி பயீன் கிராமப் பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று(20-07-2018) அவர் சடலமாக மீட்கப்பட்டார். காஷ்மீரில், அண்மைக்காலமாகக் காவலர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தீவிரவாதிகள் மீதான அச்சம் மக்களிடம் மேலும் அதிகரித்துள்ளது.   

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காவலர் சலீம் ஷாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்ற அதேபகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.