கிளப்பில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் - அதிர்ச்சியில் நிர்வாகிகள்!

பெங்களூருவில் ஒரு பொழுதுபோக்கு அரங்கத்தில் உள்ள லாக்கரில் சுமார் 3.9 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

கிளப்

பெங்களூரு செயிண்ட் மார்க்ஸ் சாலையில் உள்ளது பவுரிங் இன்ஸ்டிடியூட் கிளப். பொழுது போக்கு அரங்கமான இங்குப் பல தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் புதுப்பிக்கப்படாமல் இருந்த உறுப்பினர்களின் லாக்கர்களை சோதனை செய்யும் பணியில் கிளப் நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீண்ட நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்த மூன்று லாக்கரின் பூட்டை உடைத்துத் திறந்த போது அதில் சில பைகள் கிடைத்துள்ளன. பைகளைத் திறந்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

லாக்கரில் இருந்த ஒவ்வொரு பையிலும், கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை இருந்துள்ளன. இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது தொழிலதிபர் அவினாஸ் அமர்லாலின் லாக்கர் எனத் தெரியவந்துள்ளது. 

லாக்கரில் இருந்து ரூ.550 கோடி அளவிலான சொத்து ஆவணங்கள், 7.80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைரங்கள், ரூ.3.90 கோடி மதிப்பில் ரொக்க பணம் மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தொழிலதிபர் அவினாசுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, அதை எதற்காகக் கிளப்பில் வைக்க வேண்டும் எனப் பல கோணங்களில் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!