வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (22/07/2018)

கடைசி தொடர்பு:08:16 (23/07/2018)

`55 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை; ஒரு ஆசிரியர்...' - இது உத்தரப்பிரதேச அவலம்!

உத்தரபிரதேசத்தில், மிகவும் பாழடைந்த நிலையில், ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு செயல்பட்டு வருகிறது பள்ளி ஒன்று. இங்கு, `கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்' எனப் புகார் அளித்துள்ளார் ஆசிரியர். 

உ.பி பள்ளி

Photo Credit - ANI

உத்தர பிரதேச மாநிலம் ஃபைசாபாதில் உள்ள ரீட் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும்  இல்லாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முகேஷ் குமார் யாதவ் என்ற ஒரே ஆசிரியர் தான் பாடம் எடுத்து வருகிறார்.

ஆசிரியர் முகேஷ் குமார் யாதவ் `மொத்தம் 55 மாணவர்கள் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் குடிப்பதற்கு தூய்மையான குடிநீர் இல்லை; கழிப்பறை வசதியும் இல்லை. கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்து விட்டது. ஒரு அறையில்தான் மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வருகிறேன். மேலும், சுற்றுச் சுவர் இல்லாததால் கால்நடைகள் பள்ளியின் உள்ளே வந்து விடுகின்றன. சில சமயங்களில் மாணவர்கள் கால்நடைகளிடம் உதை வாங்கிய சம்பவமும் நிகழும்.

பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை' என ஆதங்கத்துடன் பேசிய ஆசிரியர் முகேஷிடம், இப்படிப்பட்ட சூழலிலும் பள்ளியை எப்படி நிர்வகித்து வருகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு, `அனைத்து சூழ்நிலைகளிலும் தன் மாணவர்களுக்கு அறிவைக் கொடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது' என்றார்.