வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (22/07/2018)

கடைசி தொடர்பு:16:49 (22/07/2018)

போலீஸ் அதிகாரிகள் 17 பேரின் பெயர்களில் போலி ஃபேஸ்புக் கணக்குகள்! - ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மகன் கைது

17 காவல் அதிகாரிகள் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குகளை இயக்கி வந்த இளைஞரை, அசாம் குற்றவியல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

ஃபேஸ்புக்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் சுலைமான் இப்ராஹிம் அலி என்ற 30 வயது இளைஞர் கௌஹாத்தி டிஜிபி உள்பட 17 காவல் உயரதிகாரிகளின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கை இயக்கி வந்துள்ளார். இதைக் கண்டறிந்த குற்றவியல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர். மேலும், அந்த இளைஞரின் வீட்டில் இருந்து 47 செல்போன்கள்,13 டேப்ஸ் மற்றும் 15 சிம் கார்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து சுலைமானிடம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது இதைத் தான் விளையாட்டாகச் செய்ததாகவும், பெரிய அதிகாரிகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகத் தன் நண்பர்களிடம் பெருமை காட்டிக்கொள்ளவும் இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார். இவர், அசாம் அரசில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற பொறியியல் கண்காணிப்பாளரின் மகன் என்பதும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதும் பிறகு தெரியவந்துள்ளது. மேலும், சுலைமான் தன் பெயரிலேயே மொத்தம் 6 ஃபேஸ்புக் கணக்குகள் வைத்திருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.