வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (22/07/2018)

`வீடியோவை காட்டி மிரட்டிய நபர்...!' -சிறுமிக்கு நேர்ந்த அவலம்

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளதில் பதிவேற்றிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 'வீடியோவை காட்டி பலமுறை சிறுமியிடம் தவறுதலாக அந்த நபர் நடந்துள்ளார்' என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பாலியல்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. அதிலும், முசாபர்நகர் மாவட்டத்தில் நிகழும் பாலியல் குற்ற வழக்குகள் அதிகம். கடந்த 19-ம் தேதியன்று காலை இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரின் நடந்த தேடுதல் வேட்டையில், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிர்வலை ஓயாத நிலையில், 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அந்த சிறுமியை துன்புறுத்தி பாலியில் வன்கொடுமை செய்திருக்கின்றார். அதனை வீடியோவாக பதிவு செய்த அந்த நபர், சிறுமியிடம் வீடியோவைக் காட்டி மிரட்டி பலமுறை தவறாக நடந்துள்ளார். மேலும், இதுகுறித்து மற்றவர்களிடம் சொன்னால் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி இருக்கிறார். அதனால், தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார் அந்த சிறுமி. இந்நிலையில், அந்த நபர் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் பின்னரே, சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியைக் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்' என்றார்.