வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (22/07/2018)

கடைசி தொடர்பு:19:44 (22/07/2018)

`மனம் நிறைந்து கண்ணீர் வருகிறது..!' -ஜிஎஸ்டி வரிவிலக்கிற்கு அக்‌ஷய் குமார் நன்றி

சானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன் தன் மனம் நிறைந்து விட்டதாகவும், மகிழ்ச்சி பொங்க ஆனந்தக் கண்ணீர் ததும்ப ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாலிவுட் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய் குமார். 

அக்‌ஷய் குமார்

Photo Credit - tweet/@akshaykumar

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நேற்று 28-வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கைத்தறி துணி மற்றும் உரம் தரத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் உள்ளிடப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்ற பொருள்களுக்கு 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக ஜி.எஸ்.டி மாற்றியமைக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் சானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, ஜி.எஸ்.டி-க்குள் சானிடரி நாப்கின்களை கொண்டு வந்தமைக்காக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின.

இந்நிலையில், நேற்று நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் சானிடரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளித்ததிற்காக `ஆனந்தக் கண்ணீருடன் ஜி.எஸ்.டி கவுன்சில் அமைப்புக்கு நன்றி' தெரிவித்துக் கொள்வதாக நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `மாதவிடாய் சுகாதாரத்தை புரிந்து கொண்டு ஜி.எஸ்.டி வரியிலிருந்து சானிடரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானவுடன் மனம் முழுவதும் நிறைந்து விட்டது. மகிழ்ச்சி பொங்க ஆனந்தக் கண்ணீருடன் ஜி.எஸ்.டி கவுன்சில் அமைப்புக்கு என் நன்றிகள். நான் உறுதியாக சொல்கிறேன் நம்நாட்டுப் பெண்கள் அமைதியாக தங்களின் நன்றிகளைத் தெரிவித்து வருவார்கள்' எனப் பதிவிட்டுள்ளார். பெண்களுக்காகக் குறைந்த செலவில் நாப்கின்களைத் தயாரித்து சாதனைப் படைத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவான `பேட்மேன்' படத்தின் கதாநாயகனாக நடித்தவர் அக்‌ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.