ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா... ஆப்ரிக்க நாடுகளுக்கு மோடி பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடி

இன்று டெல்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி முதலில், ருவாண்டா செல்கிறார்.  ருவாண்டா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின்னர் அங்கிருந்து உகாண்டா செல்லும் பிரதமர் அங்கு 24 மற்றும் 25 தேதிகளில்  பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். ருவாண்டா மற்றும் உகாண்டா சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

ருவாண்டா நாட்டில் மோடி கிரின்கா என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். கிரின்கா என்பது ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்புத் திட்டமாகும். மேலும் உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை வழங்குகிறார். 

அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான  பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வார். இந்த மாநாட்டில், வளர்ச்சி, அமைதி, சுகாதாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது. அதேபோன்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் தலைவர்களுடன் இரு நாட்டு உறவு குறித்து விவாதிக்கவுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் இந்தப்  பயணத்தின்போது, ஆப்ரிக்கா  நாடுகளுடன் ராணுவம், வர்த்தகம், கலாசாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!